Tuesday, May 19, 2015

பிரபாகரன் - இமாலய வியப்பும் மாபெரும் வீழ்ச்சியும்

1

மே18, அதிர்ச்சி பேரவலம் வெறுமை எல்லாமும் நம்மை உலுப்பிய நாள். கண்ணிமைக்கும் நேரத்தில் ஏதோவொரு மணித சஞ்சாரமற்ற இடத்தில் நமது தேசம் தூக்கி வீசப்பட்டது. இப்போதும் இவைகள் எல்லாம் உண்மைதான் என்று நம்பும்படி நம்மை நாமே ஆற்றுப்படுத்த வேண்டியிருக்கிறது. அந்த அளவிற்கு நாம் வெற்றியின் மீதும், தன்னலமற்ற அந்த மகத்தான மனிதர்கள் மிதும் இம்மியளவும் சஞ்சலமற்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தோம்.

இந்த நம்பிக்கையின் முலமாக இருந்ததுதான் பிரபாகரன் என்ற நாமம். ஈழத் தமிழர்களின் கால் நூற்றாண்டு கால வாழ்வுடன் இரண்டறக் கலந்த நாமமது. சிங்களத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்த நாமம் அது. பிரபாகரன் என்ற நாமம் கால் நூண்டு கால நமது வாழ்வில் தமிழர்களை ஒன்றுபடுத்தும், வசியப்படுத்தும் ஒரு குறியீடாக இருந்திருக்கிறது என்பதை அவரை விமர்சித்தவர்கள் கூட நிராகரிக்கப்போவதில்லை. மே18 இற்கு முன்னர் நமது தலைவர் பிரபாகரன் வீழக் கூடியவர், புலிகளை தோற்கடிக்க முடியும் என்ற வார்த்தைகளை நம்புவதற்கு நம்மில் விரல்விட்டக் எண்ணக் கூடியவர்கள் கூட இருந்திருக்கப் போவதில்லை. அந்தளவிற்கு அவர் மீது வெறித்தனமானதொரு நம்பிக்கை நிலவியது. அப்படி நம்புவதற்கு ஏராளமான காரணங்களும் இருந்தன.

இன்று அவர் நம்மை விட்டு மறைந்து ஒரு வருடமாகிவிட்டது. அவர் இருந்த காலத்தில் அவர் குறித்து பக்கம் பக்கமாக எழுதுவதற்கு ஆட்களும் விடயங்களும் இருந்தன. ஆனால் இன்று எங்கிருந்து தொடங்குவது என்பதே பிரச்சனையாக இருக்கின்றது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் கட்டுரையொன்றை எழுத வேண்டுமென்று அமர்ந்ததிலிருந்து எங்கிருந்து தொடங்குவது எதை எழுதுவது என்பதே ஒரு பிரச்சனையாக இருந்தது. அந்தளவிற்கு நம்மை வெறுமை ஆட்கொண்டிருக்கிறது. துரதிஸ்டவசமாக அந்த வெறுமையின், இயலாமையின் சொந்தக்காரராகவும் அவரே இருக்கிறார் என்பதுதான் வேதனைக்குரியது. 

2

சில வருடங்களுக்கு முன்னர் ஆபிரிக்க எழுத்தாளர் கூகிவா தியாங்கோவின் சிலுவையில் தொங்கும் சாத்தான்என்னும் நாவலை படித்தபோது ஏற்பட்ட உணர்வை இந்த இடத்தில் நினைத்துப் பார்க்கிறேன். விடுதலைக்கு பின்னரான கென்ய வாழ்வை சித்தரிக்கிறது அந்த நாவல். கென்யாவை காலணித்துவத்திலிருந்து விடுவிப்பதற்காக மாவ் மாவ் என்னும் விடுதலை இயக்கம் போராடியது ஆனால் விடுதலைக்கு பின்னர் எவர் விடுதலைக்காக போராடினார்களோ அவர்களே புதிய முதலாளித்துவ வாக்கத்திடம் கையேந்தும் இழி நிலைக்குத் தள்ளப்பட்டனர். தொழிலுக்காக அலைந்து திரிந்தனர். இதனை படித்த காலத்தில் நமது விடுதலைப் போராட்டம் சாதனைகளின் களமாக இருந்தது. திரும்பிய திசைகளில் எல்லாம் பெருமிதமும் நம்பிக்கையும் மட்டுமே பரவியிருந்த காலமது. ஆனால் நமது போராளிகளுக்கும் அப்படியொரு அவலநிலை வரும் என்பதை நம்மால் துளியளவு கூட எண்ணியிருக்க முடியாது. ஆனால் இன்று!

இன்று ஒன்பதாயிரத்துக்கு மேற்பட்ட போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். எந்த எதிரிக்கு எதிராக போராடுவதற்காக தயார் செய்யப்பட்டார்களோ அந்த எதிரிகளின் அனுதாபத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். காயப்பட்ட எதிரிகளுக்கு சேவகம் செய்வது நமது பெண் போராளிகள். என்னவொரு அவலம். இன்று நமது பெண் போராளிகள் எதிர் கொள்ளும் நெருக்கடிகள் ஏராளம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அது குறித்து மௌனம் சாதிப்பதே உசிதமாக இருக்கும்.
இது குறித்தெல்லாம் நமது தலைவர் பிரபாகரன் அவர்கள் தனது இறுதிக்கணங்களில் சிந்தித்திருப்பாரா. தானே தேசத்தின் உயிர் நாடியாக இருந்த சூழலில் தனக்கு பின்னர் தன்னை நம்பியிருந்தவர்கள் எவ்வாறு சின்னாபின்னப்பட்டுப் போவார்கள் என்பது குறித்தெல்லாம் அவர் சிந்திக்காமலா இருந்திருப்பார்?

திரு.பிரபாகரன் அவர்களை நினைவு கொள்ளும் இந்த சந்தர்ப்பத்தில் அவர் குறித்து இப்படியான கேள்விகள் எழுவதை தவிர்த்துச் செல்ல முடியவில்லை ஏனெனில் ஒருவரை நினைவு கொள்ளுவது என்பது அவரது பலத்தை மட்டுமல்ல பலவீனத்தையும் நினைவு கொள்வதுதான். அடுத்து வரப்போகும் தலைமுறை அவரது பலமாக சொல்லப்படும் விடயங்களில் மட்டுமல்ல பலவீனங்களிலிருந்தும் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

3

இன்று தமிழர்களின் வீழ்சிக்கான அனைத்துப் பழிகளும் அவர் மீதே சுமத்தப்படுகிறது. இது எதிர்பார்க்கக் கூடிய ஒன்றும்தான். புலிகள் என்றால் அதன் அர்த்தம் பிரபாகரன் என்பதாகவே இருந்தது. அவரின்றி ஒரு அணுவும் அசையாது அசையவும் கூடாது என்னும் நிலை. எனவே கால் நூற்றாண்டு கால பேரெழுச்சிக்கு அவர் உரித்தாக இருக்க முடியுமென்றால் அதன் வீழ்சிக்கும் அவரேதான் பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதே இதிலுள்ள தர்க்கம். இது அவரே உருவாக்கிக் கொண்டதா அல்லது ஒரு காலகட்டத் தேவைக்காக உருவாக்கப்பட்ட ஒழுங்குக்குள் மீள முடியாதவாறு அவர் விழுந்துவிட்டாரா அது பற்றி எதையும் நம்மால் ஊகிக்க முடியவில்லை ஆனால் ஒருவரை நோக்கி விரல் சுட்டும் போது ஏனைய நான்கு விரல்களும் கைநீட்டியவரை சுட்டி நிற்பதாக ஒரு கருத்துண்டு. அதே போன்றுதான் திரு.பிரபாகரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் இந்த தருணத்தில் அவரது காலத்தில் அவரது எல்லா செயல்களையும் விமர்சனமற்று தமது நலன்களுக்காக நியாயப்படுத்திய அனைத்து தரப்பினருக்கும் அவரது வீழ்சியில் பங்குண்டு என்பதையும் இந்த இடத்தில் நினைவு கொள்ள வேண்டியிருக்கிறது. அவரது செயல்கள் எல்லாவற்றுக்கும் அவர் உணர்ந்து கொள்ளும் முன்னரே விளக்க உரைகள் எழுதிய எல்லா ஊடகங்களுக்கும் அதில் பங்கு கொண்ட நபர்களுக்கும் அவரது வீழ்சியில் பங்குண்டு. இதனை நாம் இந்த தருணத்திலாவது நேர்மையுடன் ஒப்புக் கொள்ள வேண்டும். 

ஏனைய விடுதலைப் போராட்ட அனுபவங்களுடன் ஒப்பிட்டால் நாம் கொடுத்த விலையும் தியாகங்களும் ஏராளம். நமது சக்திக்கு அப்பாற்பட்டே நாம் விலை கொடுத்திருக்கிறோம். ஆனால் ஏனைய விடுதலைப் போராட்டங்களில் வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு வழங்கிய அறிவுத் தேடலுக்கான வாய்ப்புக்கள் எதனையுமே நமது போராட்டம் வழங்கவில்லை. வெற்று சுலோகங்களை முன்னிறுத்தும் ஒரு கூட்டத்தையும். விசுவாசிகள் என்ற பேரிலான நேர்மையற்ற குழவினரையுமே நமது போராட்டம் அடுத்த தலைமுறைக்காக விட்டுச் சென்றிருக்கிறது. திரு.பிரபாகரனின் மறைவோடு எல்லாமே முடிந்துவிட்டதான ஒரு சூழல் தோன்றியிருக்கிறது என்றால் நமது அரசியலில் நிட்சயமாக எங்கோ பாரிய பிரச்சனை இருந்திருக்கிறது என்றுதானே அர்த்தம். இதற்கும் காரணம் திரு.பிரபாகரன் என்பதைத் தவிர ஈழத் தமிழர்களிடம் வேறு பதிலிருக்கப் போவதில்லை.

ஈழத் தமிழர் தேசத்தின் வரலாற்றில், மிக உண்ணதமான இடத்தில் வைத்துப் போற்றவேண்டிய அவர் துரதிஸ்டவசமாக இன்று வரலாற்றின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறார். எல்லோரும் அவரது செயற்பாடுகளை குறுக்கு விசாரனை செய்யும் உரிமையை எடுத்துக் கொள்ளும் சூழல் தோன்றியிருக்கிறது.

இன்று எத்தனையோ மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்திய நமது மக்கள் தமது எதிர்காலத்தின் நம்பிக்கையாக இருந்த ஒரு மனிதரை சிறு விளக்கொளியில் நினைவு கூர முடியாதளவிற்கு கையறு நிலையில் இருக்கின்றனர். எத்தகையதொரு அவலம் நமது தேசத்திற்கு நிகழ்ந்திருக்கிறது. எத்தனை தியாகங்கள் வலிகள் சுமந்து நகர்ந்த போராட்டம் இது. இன்று அவற்றின் போசகராக இருந்த ஒரு பெரும் மணிதரை நினைத்து சில நிமிடங்களாவது அமைதியில் அழ முடியாதளவிற்கு மக்கள் மனங்கள் கல்லாகியிருக்கின்றன. அவர் உருவாக்கிய ஒளிவட்ட அரசியல் இறுதியில் அவருக்கே ஒளி மறுக்கும் அரசியலாக உருச் சிதைந்திருக்கிறது.

எனது பெருமதிப்புக்குரிய தலைவர் பிரபாகரன் அவர்கள் குறித்து அஞ்சலி செலுத்தும் நோக்கில் ஒரு கட்டுரையை எழுத வேண்டுமென்று எண்ணியதும் அவர் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகள் ஏதும் இருக்கின்றதா என்று தேடியபோது திரு.க.வேபாலகுமாரன் எழுதிய இமாலய வியப்புஎன்ற கட்டுரையை மீண்டுமொருமுறை வாசித்துப் பார்த்தேன். அரசியலில் பரந்த ஆற்றல் இருப்பதாகச் சொல்லப்பட்ட பாலகுமாரன் இவ்வாறு எழுதிச் செல்கிறார்

எல்லா வகையிலும் எம்மால் எட்டமுடியாத உயரத்திலுள்ளவர்; பற்றி எழுதுவதற்கு இப்படியொரு வாய்ப்புக் கிட்டியமை எனக்கு எதிர்பாராதது. ஆனால் இவ்வாறு எழுதுவதன் மூலமாவது அவரை ஏதோவொரு வகையில் எட்டவோ, தொடவோ முடிந்தது பற்றி எனக்குப் பெரு மகிழ்ச்சி. இவற்றினைவிட நன்றியை, பிறர் நயப்பைக்கூட எதிர்பார்க்காத அவருக்கு இப்படியாவது எமது பெரு நன்றியை பேரன்பை செலுத்த முடிந்ததே என்கிற ஆறுதலும் கிட்டுகின்றது.

1970 களிலேயே தமிழன் கதை முடிந்த கதையென்றானது, தப்பித்தலே, தாயகம் விட்டு புலம்பெயர்தலே இறுதி வழியானது. தமிழன் என்று சொல்வதே இழிவானது. இந்நிலை நீடித்திருந்தால் என்னவாகியிருக்கும் ? உலகின் அழிந்து படுகிற மொழியாக தமிழனும் அழிந்துபடுகின்ற இனமாக ஜ.நாவால் பிரகடனப்படுத்தும் நிலையல்லவா தோன்றியிருக்கும்.
இந்த கட்டத்தில் பிரபாகரன் அவர்களின் வருகை நிகழ்கிறது. அவர் மட்டுமல்ல இன்னும் பலரினதும் வருகையும் நிகழ்ந்தது. ஆனால் வரலாறு வழங்கிய வாய்ப்பினை அவர் ஒருவரால் மட்டுமே நிறைவேற்ற முடிந்தது. ஏனையோர் பின்வாங்கியதும் பழைய நிலைக்குச் சென்றதுவும் அதற்கு காரணம் தேடுவதில் இன்றளவு காலம் கழிப்பதும் எந்தளவு நகைப்புக்குரிய விடயம். இன்று பிரபாகரன் அவர்கள் தனது பணி மூலம் தமிழ்த் தேசிய இனத்தினை கட்டுக் கோப்பான, தனது விடுதலைக்காக பல்வேறு தளங்களில் போராடுகின்ற நவீன தேசியங்களின் பண்புகள் பொதிந்த ஒரு முன்னணி அணியாக்கி விட்டார், அதாவது அவரே தமிழ்த் தேசிய இனத்தினை இணைக்கின்ற காக்கின்ற மாபெரும் சக்தியாகிற அதேவேளை அவரே அதன் உருவமுமாகிவிட்டார். இதுவொரு வரலாற்றின் புதிய பரிமாணம். தலைவர்கள் தேசியப் போராட்டத்தினை முன்னெடுத்தமை பற்றி அறிந்திருக்கிறோம். ஆனால் இங்கோ தலைவனே தேசியத்தி;ன் வடிவமாகிவிட்டதை காண்கிறாம். இதனால் அவரே தேசியத்தின் தலைவன் என்கிறோம்;’

இப்படி பல விடயங்களை அடுக்கிச் செல்கின்றார் பாலகுமாரன். கட்டுரையின் முடிவில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு வாசகத்தைத்தான் நாம் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும்.

“To think freely is great
To think correctly is greater”

சுதந்திரமாக சிந்தித்தலென்பதே மிகப் பெரிய விடயம்தான். ஆனால் மிகச் சரியாக சிந்திப்பது என்பது அதனையும்விட பாரிய விடயம். இதனையே எமது தேசியத் தலைவருக்கு நாம் பேரன்பின் வரிவடிவமாக சூட்டுகின்றோம். (விடுதலைப் புலிகள் ஏடு -2004)

பிரபாகரன் அவர்களை நமது நினைவுகளில் போற்றும் இந்த வேளையில் அவர் நமது அடுத்த தலைமுறையின் சிந்தனைக்காக எந்த கேள்வியை விட்டுச் சென்றிருக்கின்றார். தன்னால் ஒவ்வொரு சந்தர்பங்களிலும் சுதந்திரமாக சிந்திக்க முடிந்திருக்கிறது ஆனால் சரியாக சிந்தி;க்க முடிந்திருந்ததா? ஏன் அவ்வாறானதொரு நிலமை ஏற்பட்டது? இனிவரப்போகும் எல்லா காலங்களிலும் ஈழத் தமிழ் சமூகத்தில் தோன்றவிருக்கும் புதிய தலைமுறைச் செயற்பாட்டாளர்கள் ஒவ்வொருவக்குமான பாடபோதனை இது.


வரலாற்றில் தனிநபர்களின் மகத்தான பாத்திரங்கள் பற்றி அதிகம் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் என்னதான் தனிநபர்கள் ஆற்றல் பெற்றவர்களாக இருந்தாலும் தனிநபர்களால் ஒரு வரலாற்றுப் போக்கையே மாற்றியமைக்க முடியாது. இதற்கு இரும்பு சான்~pலராக வருணிக்கப்பட்ட பிஸ்மார்க்கின்; கூற்றுக்கள் சான்று.

கனவான்களே! நாம் சென்ற காலத்தின் வரலாற்றையும் புறக்கணிக்க முடியாது, எதிர்காலத்தையும் படைக்க முடியாது. காலம் கழிவதைத் துரிதப்படுத்துவதற்குரிய வழி என்று கடிகாரத்தின் முள்ளை முன்நோக்கித் திருப்பிவிடும்படி ஒரு தவறான நினைப்பு சிலரைத் தூண்டுகிறது. இந்த தவற்றைப் பற்றி உங்களை நான் எச்சரிக் விரும்புகிறேன். நான் சாதகப்படுத்திக் கொண்ட நிகழ்சிகளின் மீது என்கிருக்கிற செல்வாக்கு சகஜமாகவே மிகைப்படுத்திச் சொல்லப்படுகிறது. எனினும் நான் சரித்திரத்தை படைக்க வேண்டும் என்று என்னை யாரும் கோர மாட்டார்கள். நானும் நீங்களும் சேர்ந்து இந்த உலகத்தையே எதிர்க்க முடியும். ஆனால் நான் உங்களோடு சேர்ந்து கொண்டு பாடுபட்டாலும்கூட என்னால் சரித்திரத்தை படைக்க முடியாது. அது படைக்கப்படும் வரையில் நாம் காத்துக் கொண்டுதான் இருக்க வேண்டும். விளக்குச் சூட்டைக் காட்டி நாம் பழத்தை சீக்கிரமாகப் பழுக்கும்படி செய்ய முடியாது. மேலும் பழுக்குமுன்பே அதை நாம் பறித்தாலும் அதன் வளர்ச்சியைத் தடுத்து அதைக் கெடுத்துவிடுவோம்.தன்னிடம் என்னதான் அற்றல்கள் இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் தன்னால் பயணிக்க முடியாது என்பதை பிஸ்மார்க் உணர்ந்திருந்ததன் எதிர்வினைதான் இந்த வார்த்தைகள்.

இது 1869இல் கூறப்பட்ட வார்த்தைகள். இன்று நமது சூழலில் மீண்டும் உயிர் பெறுகிறது. பல்வேறு வரலாறுகளைப் படித்த திரு.பிரபாகரன் அவர்கள் இது பற்றி உணராமலா இருந்திருக்கிறார். அவர் சாதகப்படுத்திக் கொண்டவைகள் அனைத்தும் அவரது ஆற்றல்களால் மட்டுமே விழைந்தவையல்ல என்பதை அவர் அறியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. இருந்தும் அவர் ஏதோவொரு மாயைக்குள் கட்டுண்டு கிடந்திருக்கிறார். இது அவராக உருவாக்கிக் கொண்டதா அல்லது அவர் தனது விசுவாசிகள் என்று நம்பியவர்கள் எல்லோரும் சேர்ந்து அவரை இ;வ்வாறானதொரு மாயைக்குள் மீண்டெழாதவாறு சிறைப்படுத்தி விட்டனரா? இப்படியாக பல கேள்விகள் எழுகின்றன.

வீரர்கள் பற்றிய தனது நூலில் கார்லைல் மாமனிதர்கள் என்போரை தொடக்கி வைப்பவர்கள் (Beginners) என்று வர்ணிக்கிறார். ஏனெனில் மற்றவர்களைவிட அவன் அதிக தூரம் பார்க்கிறான். மற்றவர்களைவிட அவன் விடயங்களை அதிக ஆர்வத்துடன் விரும்புகிறான். அவன் வீரன் இயல்பான போக்கை தடுக்கவோ மாற்றவோ முடியுமென்ற அர்த்தத்தில் அல்ல. அவசியமாயிருக்கும், உணர்வின்றி நிகழும் இந்த போக்கின் உணர்வு பூர்வமான சுதந்திரமான வெளியீடாக அவனது செயல்கள் இருக்கின்றன என்ற அர்த்தத்தில் அவன் வீரனாகிறான்.

நமது தலைவர் பிரபாகரன் அவர்களும் ஒரு மாமனிதர்தான் நமது அரசியல் செல்நெறியொன்றின் தொடக்கி வைப்பாளர் என்ற வகையில். அவர் மறைந்து ஒரு வருடங்கள் கடந்துவிட்ட சூழலில் சிங்களத்திற்கு வெற்றியின் குறியீடாகவும் நமக்கு வீழ்சியின் குறியீடாகவும் அவர் மாறியிருக்கிறார். இந்த வரலாற்றுப் போக்கிற்கு புறம்பாக எதனையும் திணிக்கவோ கற்பனை செய்யவோ முடியாது. இதுதான் யாதார்த்தம் என்றால் இதனை உள்வாங்கித்தான் நம்மை அறிய முடியும்.

நெகிழ்சியற்ற துணிவு, எதிரிகளிடம் மண்டியிடாமை, தனது நலன்களை துச்சமாக மதிக்கும் பண்பு ஆகியவற்றின் குறியீடாக அவர் இருக்கிறார். இருப்பார். தமிழர் தேசிய அரசியல் வரலாற்றில் இதுவரை தலைவர்கள் என அறியப்பட்டவர்கள் எவருமே தான் தனது குடும்பம் என்ற நலன்களை பாதுகாத்துக் கொண்டவர்கள்தான். அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதொரு பண்புவெளிப்பாடாக திரு.பிரபாகரன் மட்டுமே தனித்துத் தெரிகிறார். அந்தளவிற்கு தான் தனது குடும்பம் எல்லாவற்றையும் தனது இலட்சியத்திற்காக பலி கொடுக்கக் கூடிய ஒருவராக அவர் இருந்திருக்கிறார். இதில் அவர் தெளிவாக இருந்திருக்கிறார் என்றே தெரிகிறது. நாளைய வரலாற்றில் எந்த சந்தர்ப்பத்திலும் பல் ஆயிரம் போராளிகளின் வீரச்சாவிற்கு மத்தியில் தனது குடும்பத்தை பேணிக் கொண்டான் பிரபாகரன் என்ற அவச் சொல்லிற்கு ஆளாகிவிடக் கூடாது என்பதில் அவரிடம் திடமான உறுதி இருந்திருக்கிறது. அந்த உறுதிக்கு முன் நாம் தலை வணங்குவோம்.

நமது கால் நூற்றாண்டு கால வாழ்வுடன் சக்திமிக்க ஆளுமையாக கலந்துகிடந்த அவர் இனிவரப்போகும் நமது வரலாற்றுக் காலத்தில் சரிக்கும் பிழைக்குமான அரசியல் குறியீடாக நிலைத்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அவரைக் கடவுளாக்கி வழிபடுவவோர் அல்லது அவரை கேள்விகளுக்கு அப்பாற்பட்ட மணிதராகச் சித்தரிக்க முயல்வோர் அனைவரும் அவர் மறைந்த ஓராண்டை நினைவு கொள்ளும் இந்த சந்தர்ப்பத்தில் தன்னலமற்ற அவர் பண்பை மனதில் கொண்டு செயலாற்றுவதே அவருக்கும் அவர் நேசித்த நமது மக்களின் விடுதலைக்கும் நாம் செலுத்தும் பெருமரியாதையாகும் என்பதை இந்த கட்டுரை சுட்டிக்காட்ட விழைகிறது.

சரி பிழைகளுக்கும் விருப்பு வெறுப்புகளுக்கும் அப்பால், நமது பெருமதிப்புக்குரிய மறைந்த தலைவர் திரு.பிரபாகரன் அவர்களுக்கு நமது வீர வணக்கத்தைச் செலுத்துவோம். அவருடன் இணைந்து கொள்கை என்ற ஒன்றைத் தவிர வேறு எதற்கும் இடம் கொடுக்காமல் வீர மரணத்தை ஏற்றுக் கொண்ட அந்த தன்னலமற்ற அனைத்து மாவீரர்களையும் நமது பேரன்பால் போற்றுவாம். அமைதியில் விழிகள் தாழ்த்துவோம்.





‘’’