Monday, August 2, 2010

‘துரோகி’ கட்டமைக்கப்படும் அரசியல்

1

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கின்றது. அது 1990 ஆம் ஆண்டு காலப்பகுதி, மாதம் சரியாக ஞாபகம் இல்லை. விடுதலைப்புலிகளின் இரண்டாம்மட்ட தலைவர் மாத்தையா என அழைக்கப்பட்ட மகேந்திரன் எனது சொந்த ஊரான தம்பலகாமத்திற்கு வருகிறார். மக்கள், தம்பலகாமத்தின் பிரதான வாயில் பகுதியான புதுக்குடியிருப்பிலிருந்து வீடுகள் தோறும் நிறைகுடங்கள் சகிதம் பூக்கள் தூவி அவரை வரவேற்றனர். எனது வீட்டு வாயிலில் வைத்து அவருக்கு நான் சந்தனப் பொட்டிட்டது எனக்கு இப்போதும் நன்றாக ஞாபகம் இருக்கின்றது. இந்த சம்பவம் இடம்பெற்ற போது எனக்கு வயது 14. அப்போது தமிழ்த் தேசியம் என்ற சொல்லைக் கூட நான் கேள்வியுற்றிருக்கவில்லை. விடுதலை போராட்டம,; அரசியல் இது பற்றியெல்லாம் எதுவும் தெரிந்திருக்கக் கூடிய சூழலும் எனக்கு கிடைக்கவில்லை.

ஆனால் தமிழ்த் தேசிய அரசியல் குறித்தும் விடுதலைப் போராட்ட வரலாறு குறித்தும் நான் அறிந்து கொள்ள முற்பட்ட பிற்காலத்தில் அன்று சந்தனப் பொட்டிட்ட மாத்தையா எனக்கு துரோகியாகவே அறிமுகம் செய்யப்பட்டார். அன்றைய அரசியல் பதிவுகள் அவரை அவ்வாறுதான் அறிமுகம் செய்தன. இது குறித்து இப்போது நினைத்துப் பார்க்கும் போது ஒரு வகையில் விசித்திரங்கள் நிறைந்த பாதையில் பயணித்து வந்திருப்பதான உணர்வே கிடைக்கின்றது. அவர் ஏன் துரோகியாகிப் போனார் என்பதற்கான காரணங்களை புலிகளின் மேற்பார்வையில் வெளியிடப்பட்ட நூல்களில் கானலாம். இது பற்றி அடேல் பாலசிங்கம் தனது ‘சுதந்திர வேட்கையிலும்;’ சொல்லியிருக்கின்றார். இது மாத்தையா குறித்து பேச முயலும் ஒரு கட்டுரையல்ல. துரோகி என்ற சொல் எனக்கு முதல் முதலாக பரீட்சயமான சம்பவம் ஒன்றை நினைவு கொள்ளும் நோக்கிலேயே இந்த விடயத்தை எடுத்தாண்டுள்ளேன்.

நான் நினைக்கின்றேன் நமது தமிழ்த் தேசிய அரசியலில் அதிகம் பிரபலமான சொல் ‘துரோகி’ என்பதாகத்தான் இருக்க முடியும். அந்த அளவிற்கு விடுதலை என்ற சொல் கூட பரவலடைந்திருக்கவில்லை. ஆரம்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி மேடைகளில் அமிர்தலிங்கம் போன்றவர்களால் தமது எதிரணியினரை இழிவுபடுத்தும் நோக்கில் கையாளப்பட்ட ‘துரோகி’ பின்னர் ஆயுதவழியில் விடுதலை தேடிப் புறப்பட்ட இயக்கங்களால் தத்தெடுக்கப்பட்டது. இறுதியில் இயக்கவழி அரசியலில், தமது செயற்பாடுகளை விமர்சிப்போர், மாற்று நிலைப்பாடுகளைச் சொல்லுவோர், ஆக்க பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போர் என அனைத்து தரப்பினரையும் இந்தச் சொல் துரத்தியடித்தது. சில நேரங்களில் அவர்கள் குருதியில் நனைந்து தன்னை நிறுவிக் கொண்டது. இன்று வரை இந்த சொல் மாற்று கருத்துக்களை சொல்வோரை அச்சுறுத்தி அடிபணிய வைக்கும் ஆயுதமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அதிகம் விடுதலைப்புலிகள் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் ஏனையோர் அனைவரும் தூய்மையானவர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ள முடியாது. புலிகள் தமக்கு எதிரணியில் இருப்போரை (மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டோர் குறித்து இங்கு நான் குறிப்பிடவில்லை) மக்கள் மத்தியிலிருந்து அன்னியப்படுத்துவதற்கு எவ்வாறு ‘துரோகி’ என்ற சொல்லை ஒரு உக்தியாகக் கைக்கொண்டு வந்தனரோ அவ்வாறே புலிகளுக்கு எதிரான அணியில் இருந்தோரும் தம்மை விமர்சிப்போரை, நிராகரிப்போரை தூற்றுவதற்கும் பழிவாங்குவதற்கும் அதே ‘துரோகி’ பட்டத்தையே பயன்படுத்திக் கொண்டனர். எங்குமே கருத்து வெளிப்பாட்டுக்கான நாகரிகம் பின்பற்றப்பட்டிருக்கவில்லை. இத்தனை அழிவுகளுக்கு பின்னரும் கூட இதில் பெரியளவு முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதே மிகவும் துரதிஸ்டவசமானது. இதற்கு சிறந்த உதாரணம் எனது இந்தியா குறித்த கட்டுரை தொடர்பில் எனக்கு றோ பட்டம் சூட்டப்பட்டமையாகும். ஒரு கருத்து நிலைப்பாட்டை கருத்தாக எடுத்துக் கொண்டு எதிர்வினையாற்றக் கூடிய சூழல் நம்மத்தியில் இன்னும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியளவு வளர்ச்சியடையவில்லை. இந்த போக்கில் மட்டும் இடதுசாரி வலதுசாரி என்றெல்லாம் நமக்குள் பேதங்கள் இல்லை. நமக்கு முரண்பாடான கருத்துக்களை கூறுவோரை என்ன வழியைக் கையாண்டாவது உரையாடல் அரங்கிலிருந்து அகற்றிவிட வேண்டுமென்பதே நமது முதன்மை நோக்காக இருக்கின்றது. இது ஒரு எதேச்சாதிகார வழிமுறை இதனை புலிகள் செய்தால் பாசிசம் மற்றவர்கள் செய்தால் புரட்சி என்று அர்த்தம் கற்பிப்பது எவ்வாறு சரியாகும் என்று எனக்கு விளங்கவில்லை.

இதில் பிறிதொரு சுவார்ஷயமான விடயம் இருக்கின்றது. இது ‘துரோகி’ என்று ஒருவரை குறிப்பிடாமலேயே அவரை துரோகியாக்கும் கலை. இந்த கலையை கற்றுக் கொள்ள வேண்டுமாயின் அதனை நமது தமிழ் இடதுசாரிகளிடமிருந்தே (இதிலும் விதிவிலக்குகள் உண்டு) கற்றுக் கொள்ள முடியும். முன்னைய ‘துரோகி’ பட்டம் பேராட்ட சூழலில் மாற்று நிலைப்பாடுகளில் இயங்குவோரை இலக்கு வைத்தது ஆனால் நமது இடதுசாரிகளின் அனுகுமுறையோ வித்தியாசமானது. தாம் மார்க்சியம் என்று கருதும் ஒரு நிலைப்பாட்டுக்கு எதிராக கருத்துக்களை முன்வைப்போரை தனிமைப்படுத்துவதற்கும், மனச் சோர்விற்கு உள்ளாக்கி ஒரு வகையான உளவியல் நெருக்கடிக்குள் தள்ளிவிடும் குரூர எண்ணம் கொண்ட அணுகுமுறை இவர்களுடையது. இங்கு துரோகி என்ற பட்டம் சூட்டலுக்குப் பதிலாக சி.ஜ.ஏ, றோ போன்ற பட்டங்கள் சூட்டப்படும். சொற்களில் மட்டுமே வித்தியாசம்.

2
இன்று ‘துரோகி’ என்பது நமது சூழலில் மிகவும் அருவருப்பூட்டும் ஒரு சொல்லாக மாற்றியிருக்கின்றது. இதனைப் பயன்படுத்தியவர்களையே அது இன்று துரத்துவதுதான் இதிலுள்ள பெரிய சோகம். சமீபத்தில் எனது நன்பர் ஒருவரிடம் இது பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது அவர் சொன்னார். ‘துரோகி’ இது ஒரு மலினப்பட்ட சொல். இது பற்றி பேசுவதே ஒரு வகையில் அவமானகரமானது என்றார். இதில் ஒரு வேடிக்கையான விடயம் என்னவென்றால் மே.18 இற்கு முன்னர் எவரெல்லாம் பெரும் மனிதர்களாகவும், வீரர்களாகவும் போற்றப்பட்டார்களோ அவர்கள் எல்லாம் இன்று துரோகிகள் ஆக்கப்பட்டிருப்பதுதான். சில வேளை நாளை சரனடைந்து முகாம்களில் வாழும் போராளிகள் பொது மன்னிப்பின் பேரில் வெளியில் வந்தால், பொது மன்னிப்புப் பெற்ற அனைவருமே துரோகி ஆக்கப்பட்டாலும் கூட ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இந்த இடத்தில்தான் ‘துரோகி’ என்ற சொல் கொண்டு கட்டமைக்கப்படும் அரசியல் ஒரு கேள்வியை உந்தித் தள்ளுகின்றது. யார் யாருக்கு துரோகி? இதனை தீர்மானிப்பது எதிர்நிலைப்பட்ட அரசியலா அல்லது மக்களின் நலனா?


மே18 இற்கு முற்பட்ட புலிகளின் தலைமையிலான தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் ‘துரோகி’ என்பதன் அர்த்தம் மிகவும் எளிமையானது. எவர் புலிகளின் தலைமைக்கு எதிராக செயற்பட எண்ணுகின்றாரோ, எவர் புலிகளின் தலைமைக்கு எதிராக சிந்திக்கின்றாரோ அவர் துரோகி. ஏனெனில் அவர் தலைமைக்கு விசுவாசமற்று இருக்கின்றார் என்ற ஒற்றைப்பார்வையே இங்கு மேலாதிக்க வாதமாக இருந்தது. புலிகளின் காலத்தில் ‘துரோகி’ என்பதன் அரசியல் பரிமாணம் இவ்வாறுதான் அமைந்திருந்தது. இந்தச் சூழலில் புலிகளை கோட்பாட்டு ரீதியாக விமர்சிப்பதாகக் கூறிக் கொண்டோரும் அந்தச் சொல்லையே பல்வேறு சந்தர்ப்பங்களில் தம்மை நிலைநிறுத்த பயன்படுத்திக் கொண்டனர்.

இன்று நிலைமை மேலும் மோசமடைந்திருக்கின்றது. மே18 இற்கு பிற்பட்ட காலத்தை ‘துரோகிகள்’ வசைபாடும் படலம் என்று சொன்னாலும் அது மிகையில்லை, அந்தளவிற்கு துரோகிகள் மலிந்து விட்டார்கள். முன்னராவது ஒரு அளவு கோல் இருந்தது. புலிகளின் தலைமைக்கு அவர்கள் விசுவாசமற்றவர்கள் ஆகவே அவர்கள் துரோகிகள். ஆனால் இப்போது என்ன அளவு கோல் கொண்டு இந்த ‘துரோகி’ பட்டங்கள் சூட்டப்படுகின்றன. இதனை தீர்மானிப்பது யார்? ஒரு வகையில் கோட்டாம்பாக்க தமிழ் சினிமா பார்ப்பது போன்றிருக்கின்றது எங்கள் ஈழத் தமிழர் தேசிய அரசியல்.

ஒருவர் துரோகியாக்கப்படும் போது அவர் யாருக்கு துரோகியாக இருக்கின்றார் என்பதுதான் முதன்மையான கேள்வியாக இருக்க வேண்டும். அவர் குறிப்பிட்ட ஒரு சிலரின் அரசியலுக்கு அல்லது அவர்களின் விருப்பங்களுக்கு துரோகியாக இருக்கின்றரா அல்லது தனது மக்களுக்கு துரோகியாக இருக்கின்றாரா? எனவே அடுத்தவருக்கு துரோகி பட்டம் சூட்ட விருப்புவோர் இந்த கேள்வியில் நின்று சிந்திப்பது அவசியம். இல்லாவிட்டால் நாளை அனைவரும் துரோகியாக்கப்படலாம். இவ்வாறான வசை புராணங்களில் நேரத்தை விரையம் செய்வோர், இறுதியில் அது உங்களையும் விட்டுவைக்கப் போவதில்லை என்பதை நினைவில் நிறுத்திக் கொள்வது நல்லது. இன்னொன்றையும் மனங்கொள்வது அவசியம், நேற்று கொண்டாடப்பட்டோர் இன்று துரோகியாகிருப்பது போல் இன்ற தூற்றப்படுவோரை வரலாறு பெரும் மனிதர்களாக, மக்களின் நலனில் நின்று சிந்தித்தவர்களாக பதிவு செய்யலாம். எல்லாமே காலநிர்ணத்திலேயே தங்கியிருக்கின்றது.

கியூபப் தேசிய புரட்சியாளர் ஹெலே மார்த்தி திறமையாளர்கள் பற்றி இவ்வாறு கூறுவார். ‘கையறு நிலையில் உள்ளவர்களுக்கு உதவுவதுதான் திறமையுள்ளவர்களின் கடமையாகும், இதுதான் மனிதர்களை அளவிடும் கருவி’ தமிழர் தேசமெங்கும் கையறு நிலையில் இருக்கும் மக்களுக்கு தோள்கொடுப்பதும், அவர்களது நலன்கள் குறித்து சிந்திப்பதும் துரோகமென்றால், தமிழர் தேசத்தில் துரோகியாக இருப்பது குறித்து நாம் பெருமைப்படலாம்.


யதீந்திரா
‘’’



Friday, September 25, 2009

புரட்சிகர அரசியலின் தார்மீக நியாயமும் நமது மொழிபெயர்ப்பு நம்பிக்கைகளும்

1

ஒருவரது தனிப்பட்ட அனுபவத்தில், அவலங்களிலேயே பெரிய அவலம் தனது நம்பிக்கைகள் சிதைந்து செல்வதற்கு தானே சாட்சியாக இருப்பதுதான். நாம் ஒன்றை அன்னாந்து பார்த்துக் கொண்டிருக்க நாம் கனவிலும் நினைத்துப் பார்க்காத பல விடயங்கள் நம் முன் நிஜமாகியிருக்கும் சூழலில் சில நாட்களாகவே சில கேள்விகள் மனதை அரித்துக் கொண்டிருந்தன. புரட்சிகர அரசியலின் தார்மீக நியாயம் என்ன? அப்படி ஏதாவது இருக்கிறதா? உண்மையிலேயே மார்க்சியம், புரட்சிகர அரசியல் மற்றும் விடுதலை அரசியல் என்ற சொற்களுடன் தமது வாழ்வையே நகர்த்திக் கொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு வகையான அதிர்ச்சிக்கும் விரக்திக்கும் உரிய காலமாகத்தான் இருக்க முடியும் ஆனால் அதிர்ச்சி, விரக்திக்கு அப்பால் விடயங்களை பாசீலிக்க வேண்டிய தேவை நமக்குண்டு என்ற அடிப்படையில்தான் இந்த கட்டுரையை எழுதுகின்றேன்.

நான் எனது பாடசாலைக்காலத்தில் பிடெல் காஸ்ரோவின் வரலாறு ‘என்னை விடுதலை செய்யும்’ என்ற நூலை படித்ததிலிருந்து அவரின் எழுத்துக்களுக்காக ஏங்கித் திரிந்த காலத்தை இன்றைய சூழலுடன் பொருத்திப் பார்க்கும்போது கவலைப்படுவதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும் என்னால்?. ஆனால் மேற்படி நிலைமைகள் ஏற்படுத்தியிருக்கும் சோர்வுக்கு அப்பால் இன்றைய காலத்தின் பின்புல அரசியல் குறித்து பார்ப்பதே எனது நோக்கம். அவ்வாறு பார்ப்பதுதான் அடுத்த தலைமுறை மத்தியில் ஆரோக்கியமான உiராயடல்களுக்கு வழிவகுக்கும். அது வெற்று சுலோக அரசியலையும் வெறும் உணர்ச்சிவசப்படுதல்களையும் கடந்து செல்லக் கூடியதொரு சிந்தனைப் பாராம்பரியத்திற்கு வழிசமைக்கும். கடந்த மாதம் வரை உலக புரட்சிகர அரசியலில் ஆதர்~மம் கியூபா என்றும் புரட்சிகர அரசியலின் விழைநிலம் லத்தீன் அமெரிக்கா என்றும் என்னிடம் ஒரு நம்பிக்கையிருந்தது. இப்பொழுது அந்த நம்பிக்கையை நிரந்தரமாக நிறுத்திவிட்ட ஒரு முற்றுப்புள்ளி மட்டும்தான் துருத்திக் கொண்டு தெரிகிறது.

2
உலகின் பல பாகங்களிலும் கிறிக்கட், புட்வோல் இன்னும் என்னென்னவோ கேளிக்கைகள் அரங்கேறிக் கொண்டிருக்க மனித குலமே வெட்கித் தலைகுணியும் வகையில் ஈழத் தமிழர்களின் போராட்டம் பயங்கரவாத சுலோகத்தின் கீழ் மிக நுட்பமாக அழித்தொழிக்கப்பட்டது, பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். ஒரு தேசிய இனம் தனது அடிப்படைகளை இழந்து நடு வீதிக்கு வந்தது. இது ஒரு பக்கமென்றால் அடுத்தது இந்த வரலாற்று காலம் நமக்கு தந்திருக்கும் படிப்பினைகள். என்னைப் பொருத்தவரையில் இந்தச் சூழல் தரும் மிகமுக்கிய படிப்பினை என நான் பார்ப்பது இன்றைய அரசியலின் அரசியலை விளங்கிக் கொள்வதற்கு கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தைத்தான்.

ஒரு வெற்றி தரும் படிப்பினைகளை விட ஒரு தோல்வி தரும் படிப்பினைகள் அதிக கனதியுடையவை. ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம் இன்று கண்டிருக்கும் தோல்வி நமக்கு முன் நிறுத்தியிருக்கும் அடிப்படைக் கேள்வி அறவழியற்ற உலக அரசியலை நாம் எவ்வாறு அறவழியில் எதிர்கொள்வது? அடிப்படையில் அரசியல் என்பதே நலன்களை கையாளும் கலையாக இருக்கும் போது அரசுகளுக்கிடையிலான உறவில் புரட்சி, விடுதலை மற்றும் தார்மீக நியாயம் இப்படியான சொற்களுக்கு ஏதாவது உயிர்ப் பெறுமதி இருக்க முடியுமா? அப்படியிருப்பதாக நம்பியது நமது முட்டாள்தனமா? நாம் அரசியலின் அரசியலை விளங்கிக் கொள்ள முடியாதவர்களாக இருந்திருக்கிறோமா?

3
இது இடது – வலது என்ற அரசியல் பிரிவு நிலைகள் அர்த்தமிழந்து கிடக்கும் காலம். நான் இதனை அரசியல் அர்த்தத்தில் இடதில் வலதும், வலதில் இடதும் கலந்து பின்னிப் பிணைந்து கிடக்கும் இடவலக் கலவிக் காலம் என்பேன். குழம்மிய குட்டையில் மீன் பிடிக்கும் கெட்டித்தனத்தில்தான் ஒருவரது அல்லது ஒரு சமூகத்தினது வெற்றி தங்கியருக்கிறதே தவிர இங்கு இடது வலது என்றவாறான அரசியல் பிரிவுநிலைகளிலல்ல.

90களில் சரியத் தொடங்கிய சோவியத்தின் சிகப்புநிற அரசியல் செல்வாக்கு படிப்படியாக உலக சோசலிச முகாம்களை தேசியவாத அரசியல் நோக்கி நகர்த்தியது, அதுவரை சோவியத்தின் இராட்சத பலத்தின் நிழலில் தமது இருப்பை உறுதிப்படுத்திவந்த தேசங்கள் போக்கிடமற்று புதிதாக உருவெடுத்த அமெரிக்கா தலைமையிலான ஒற்றை ஒழுங்கில் கலந்தன. பொதுவாக இந்த பின்சோவியத் காலத்தை அமெரிக்க மேலாதிக்க அரசியல் காலம் என பலர் கணித்தாலும் அது முற்றிலும் சரியானதொரு கணிப்புத்தானா என்பது பிறிதொரு விவாதத்திற்குரியதாகும். ஏனென்றால் இந்த காலத்தில் அமெரிக்க தலைமையிலான அரசியல் ஒழுங்கொன்று உருவாகியிருந்தாலும் அதன் எதிர் அணியில் நிறங்களற்ற அரசியல் கூட்டுக்களும் உருவாகின. குறிப்பாக சீனா, ரஸ்யாசார்ந்து அவ்வாறான நாடுகள் தமது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முயன்றன. கியூபா, பொலிவியா, நிக்கரகுவா போன்ற நாடுகளும் அமெரிக்க எதிர்நிலையில் தமது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் சீனா மற்றும் ரஸ்ய அணியில் கைகோர்த்துக் கொண்டன.

இங்கு கவனிக்க வேண்டிய விடயம், இந்த கூட்டுக்கள் கொள்கை சார்ந்தல்லாமல் அரசியல் நலன்கள் சார்ந்தாகவே அமைந்திருந்தன என்பதே. குறிப்பாக சோவியத்தின் சிதைவிற்கு பின்னர் உருவெடுத்த புதிய அரசியல் சூழலில் அரசியல் கோட்பாடு, புரட்சிகர இலக்கு என்றவாறான அர்த்தத்தில் தேசங்களுக்கு இடையிலான கூட்டுக்கள் உருவாகியிருக்கவில்லை. இருவேறுபட்ட நம்பிக்கைகள் சார்ந்த சீனாவிற்கும் ஈரானுக்கும் இடையில் நிலவும் உறவிற்கு என்ன அர்த்தத்தை நாம் கற்பிக்க முடியும்? நலன்கள் என்ற ஒன்றைத்தவிர வேறு என்ன விளக்கத்தைச் சொல்ல முடியும்? ரஸ்யாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையில் நிலவும் உறவை எந்த கருத்தியல் கொண்டு விளக்க முடியும்? எனவே இந்த பின்புலத்தில் கவனம் கொண்டால் ஒரு உண்மை நமக்கு வெள்ளிடைமலையாகும,; அதாவது பின் சோவியத் காலத்தில் அமெரிக்க தலைமைலான வலுவான அரசியல் தளம் ஒன்று உருவாகிருந்தாலும் அது ஒன்று மட்டுமே அரசியல் தளமல்ல சீனா சார்ந்தும், ரஸ்யா சார்ந்தும், லத்தீனமெரிக்க கண்டம் சார்ந்தும் பல அரசியல் தளங்கள் உருவெடுத்தன. இவைகள் தத்தமது நலன்கள் சார்ந்து தமக்குள் உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டன. இவ்வாறு ஏற்படும் அரசியல் கூட்டுக்கள் அனைத்தும் பெரும்பாலும் அமெரிக்கா தலைமையிலான அரசியல் அணிக்கு எதிர்நிலையில் இருப்பதால் இவைகள் ஏதோ புரட்சிகரமான முற்போக்கான அணிகள் போன்ற மாயைகள் நிலவியது ஆனால் உண்மையில் அப்படியொன்றும் கிடையாது. குறிப்பாக சீனா, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக நடைமுறைகள் குறித்த விவாதங்களுக்கு இடமற்ற எதேச்சாதிகார அரசியல் ஒழுங்கையே இன்றுவரை கொண்டிருக்கிறது. ரஸ்யா செச்னியா விடயத்தில் தனது கோர முகத்தை தெளிவாக நிரூபித்திருக்கிறது. பாக்கிஸ்தான் போன்ற நாடுகளின் எதேச்சாதிகார பிற்போக்குத் தனம் பற்றி நாம் விவாதிக்க வேண்டிய தேவையே இல்லை. எனவே பின்சோவியத் கால அரசியல் ஒழுங்கை பலவாறான நலன்கள் சார்ந்த அரசியல் சக்திகளின் போட்டிவாத அரசியலின் காலமென்றே நாம் வரையறுக்கலாம். இங்கு அரசியல் குழும்பிக் கிடக்கின்றது. குழும்பிய குட்டையில் மீன் பிடிக்கும் போட்டியில் ஒவ்வொருவரும் தமது பங்கிற்காக இயங்குகின்றனர்.

4
மீண்டும் லத்தீனமெரிக்க அரசியலுக்கு வருகிறேன். இங்கும் நான் மேலே குறிப்பிட்டது போன்றுதான் நிலைமைகள் இருக்கின்றன. இன்றைய லத்தீனமெரிக்க அரசியல் என்பது இரண்டாக பிரிந்து கிடக்கிறது. அமெரிக்க கொள்கையுடன் இணைந்து பயணிக்கும் நாடுகள் ஒரு புறமாகவும், எதிர்நிலையில் நிற்கும் நாடுகள் இன்னொரு புறமாகவும் இருக்கின்றன, இதில்தான் கியூபா, பொலிவியா, வெனிசுவேலா போன்ற நாடுகள் முன்னனி வகிக்கின்றன. காஸ்ரோ தலைமையிலான கியூபா கடந்த 50 வடங்களுக்கு மேலாக அமெரிக்காவிற்கு வளைந்து கொடுக்காத ஒரு அரசியல் வரலாற்றைக் கொண்டிருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாதுதான், இந்த வளைந்து கொடுக்காத பண்புதான் இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் அது ஒரு ஆதர்ஸம நாடாக மாறியதற்கு காரணம். சோவியத்தின் வீழ்ச்சி, சீனா தேசியத்திற்கு மாறியமை போன்றவற்றின் பின்புலத்தில், மொஸ்கோவிற்கும் பீங்கிங்கிற்கும் கொள்கைப் பயணம் செய்துகொண்டிருந்த இடதுசாரிகள் போக்கிடமற்று கியூபாவை வலம்வரத் தொடங்கினர் ஆரம்பத்தில் லத்தீனமெரிக்க மார்க்சிய அனுபத்தை அலட்சியம் செய்த மரபுவழி மார்க்சியர்களும் பின்னர் அதனை நோக்கி நகர்ந்தனர்.

லத்தீனமெரிக்க புரட்சிகர அரசியல் என்பது பொதுவாக இடதுசாரி அரசியலாக கணிக்கப்பட்டாலும் அடிப்படையில் அவைகள் தேசிவாதத்திற்கு முதன்மையளிக்கும் அரசியலாகவே இருக்கின்றன. சோவியத்தின் வீழ்ச்சி மற்றும் சீனத்தின் தேசியவாதம் நோக்கிய திருப்பம் ஆகியவற்றின் பின்புலத்திலேயே இதனை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். சேகுவேராவுடன் இணைந்திருந்தவரும் கியூப புரடச்சியின் ஆதரவாளருமான பிரஞ்சு மார்க்சியர் ரெஜி ரெப்கே இனி தேசியத்துடன் இணையாத சோசலிசம் உயிர்வாழ முடியாது என்று குறிப்பிட்டதை இந்த பின்புலத்தில் வைத்துத்தான் நாம் விளங்கிக் கொள்ள முயல வேண்டும். எனவே இங்கு புரட்சிகர அரசியல் ஒழுங்கு என்பது அந்தந்த குறிப்பிட்ட நாடுகளின் நலன்களுடன் மட்டுப்பட்டிருந்ததேயன்றி உலகளாவிய புரட்சிகர அரசியல் ஆதரவு என்ற ஒழுங்கில் ஆரம்பத்திலிருந்தே இணைந்திருக்கிவில்லை. அவ்வாறானதொரு பண்பு சேகுவேராவிடம் மட்டுமே இருந்தது எனலாம் அந்தவகையில் சேயை லத்தீனமெரிக்காவின் இறுதிப் புரட்சியாளர் என நாம் கணிக்கலாம். ஆரம்பத்தில் லத்தீனமெரிக்க கண்டம் தழுவியதாக இருந்த புரட்சிகர அரசியல் ஆதரவு கூட படிப்படியாக மங்கத் தொடங்கியது. சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவுடனான உடன்பாடுகளுக்கமைய கொலம்பியாவுடனான உறவுகளை துண்டிக்கும் முடிவை நோக்கி ஈவேசாவேஸ் சென்றிருப்பதை நாம் இந்த பின்னனியில் லைவத்துத்தான் விளங்கிக் கொள்ள வேண்டும்.

கடந்த பலதசாப்தங்களாக பல்வேறு போராடும் சக்திகளுக்கும் கியூப எழுச்சியும் அமெரிக்க எதிர்ப்பு நிலையில் கியூபா கடைபிடித்துவரும் உறுதிப்பாடும் ஒரு வகையான ஈர்ப்புக் கவர்ச்சியைக் கொடுத்தது உண்மைதான். இதில் தமிழகம் மற்றும் ஈழத்தில் இயங்கிய இடதுசாரி நம்பிக்கையாளர்களும் அடங்குவர். அவ்வாறானவர்கள்தான் கியூபா ஜ.நாவில் மனிஉரிமைகள் கழகத்தில் சிறிலங்காவிற்கு ஆதரவாக வாக்களித்து தனது நிஜ முகத்தை காட்டியபோது அதிர்சிக்குள்ளாகினர். இது குறித்து லத்தீனமெரிக்க சிந்தனைகளை பரப்புவதை தனது இலக்காகக் கொண்டு இயங்கிவரும் எழுத்தாளர் அமரந்தா கியூப அதிகாரிகள் மற்றும் புத்திஜீவிகள் குழுவிற்கு ஒரு அதிருப்தி கடிதத்தையும் எழுதியிருந்தார். (அது குறித்து தோழர் N~hபாசக்தி வெளிப்படுத்திய எதிர் கருத்துக்களை நான் இங்கு கருத்தில் எடுக்கவில்லை) அமரந்தாவின் கடிதத்திற்கு பதிலளித்திருக்கும் மார்க்சிய எழுத்தாளரும் தற்போது கியூபாவில் தங்கியிருந்து இயங்கிவருபவருமான ராண் ரெட்நூர் அழித்திருக்கும் பதில் கருத்தில் கொள்ளத்தக்கது…

“மார்ச் மாதத்தில் கொலம்பிய ஆயுதப் போராட்டக் குழுவின் (குயுசுஊ) பின்னடைவிற்கு பிடெலும் சாவேசும் என்ன எதிர்வினையாற்றினார்கள் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். இன்றைய லத்தீன் அமெரிக்காவில் மீதியிருக்கும் ஒரே ஆயுதப் போராட்ட இயக்கம் குயுசுஊ மட்டுமே. இந்நாளில் கியூபாவும் அதன் நேசநாடுகள் இரத்தம் சிந்தாமல் வெற்றி பெறுவதையே விரும்புகிறார்கள். அதுபோன்ற தியாகங்களுக்கு மக்கள் தயாராக இல்லாதபோது அவ்வாறு முடிவு செய்வதும் சரியே.

உங்களது (ஆசிய கண்டத்தில்) பெரும்பாண்மை மக்களின் முன்னேற்றத்திற்கும் நல்வாழ்விற்குமான சாத்தியபாடுகள் முற்றிலும் வேறானவை. கியூபாவின் வெளியுறவுக் கொள்கை சந்தர்ப்பவசமானது என்று வருத்தத்துடன் தெவிக்கும் இவ்வேளையில், அதன் சில உள்நாட்டுக் கொள்கைகளும் கூட அவ்வாறானவை என்பதை தெரிவிக்கிறேன் இதில் நாம் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை”

அமரந்தாவிற்கு பதிலளித்திருக்கும் பிறிதொரு மார்க்சியரும் அவுஸ்திரேலிய சோசலிச கூட்டணியைச் சேர்ந்தவருமான க்ரிஸ் ஸ்லீ நாம் கவனம் கொள்ள வேண்டிய முக்கியமானதொரு விடயத்தை அடிக்கோடிட்டிருக்கிறார்…

“கியூபாவுக்கும் தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கும் ஆதரவாளன் என்றளவில் நான் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளேன். ஆனால் இதில் ஆச்சரியமடையவில்லை. இயன்றளவு பல நாடுகளுடன் நட்புறவு கொள்ள எண்ணும் கியூப வெளியுறவுக் கொள்கை, இந்த நாடுகளிலுள்ள அரசின் தன்மையை கணக்கில் கொள்ளவில்லை.”
இந்த இடத்தில் க்ரிஸ் ஸ்லீ குறிப்பிட்டிருப்பது போன்று கியூபாவின் நட்புறவுக் கொள்கையானது குறிப்பிட்ட நாடுகளின் உள்ளக நிலைமைகளை கருத்தில் கொண்டல்லாமல் அதன் தேசிய நலன்கள் சார்ந்ததாகவே இருக்கின்றது என்பதே துலாம்பரமானது. என்னளவில் இது ஒன்றும் ஆச்சரியமான உண்மையல்ல. கியூபா மட்டுமல்ல அனைத்து நாடுகளும் தத்தமது நலன்கள் சார்ந்தே வெளியுறுவுக் கொள்கைகளை பேணிவருகின்றன. இங்கு லத்தீன் அமெரிக்காவின் சில நாடுகளை நாம் தனித்து பார்க்க முற்பட்டதே கியூபாவின் முடிவு நமக்கு அதிர்ச்சிக்குரியதாக இருக்கக் காரணம். இப்பொழுது எல்லாம் தெளிவாகியிருக்கும் என்றே நம்புகிறேன்.

5
இங்கு நாம் ஒரு விடயத்தை தெளிவாக குறித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது நன்பர்களே! அதாவது அரசினையும் (ளுவயவந) புரட்சிகர அரசியலையும் (சுநஎழடரவழையெசல pழடவைiஉள) பகுத்துப் பார்க்கும் அரசியல் பார்வை நமக்கு தேவை என்பதுதான் அது. அவ்வாறானதொரு பார்வை நம்மிடம் இல்லாததால்தான் கியூபாவின் முடிவு நமக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்திருக்கிறது என்றே நான் எண்ணுகிறேன். நாம் பொதுவாகவே கியூபா, வெனிசுவேலா, பொலிவியா போன்ற நாடுகளையும், புரட்சிகர அரசியலையும் இணைத்து புரிந்து வந்திருக்கிறோம். நாடுகள் என்ற ரீதியில் அவற்றின் தேசிய நலன்கள் சார்ந்த இயக்கத்திற்கும் அதில் புரட்சிகர அரசியலின் இயங்குநிலை குறித்தம் நாம் கணிக்கவில்லை. இதுதான் நமது பார்வைக் குறைபாட்டிற்கு காரணம். நமது பார்வைகள் குறைபாடுடையதாக இருப்பது ஒரு பிழையல்ல, திறந்த கலந்துரையாடல், கருத்தாக்கம் பின்னர் விவாதம் இப்படியாகத்தான் நமது உரையாடல் வளர்ந்து சென்றிருக்கிறது, அதுதான் இயங்கியலும் கூட. இங்கு நான் அழுத்திச் சொல்ல முயல்வது என்னவென்றால் நான் மார்க்சியத்தையோ அல்லது விடுதலைசார் அரசியலையோ நிராகரிக்கவில்லை, ஆனால் அவைகள் நமது சூழல் மற்றும் தேவைகளிலிருந்து நோக்கப்பட வேண்டுமென்றே வாதிடுகிறேன். தேவையில்லாமல் அன்னிய அரசுகளின் நிகழ்சிநிரல்களுக்குள் மூக்கை நுழைக்க வேண்டிய தேவை இனியும் நமக்குத் தேவையில்லை என்றும் அவர்களது நிகழ்சிநிரலை நமது சூழலுக்குள் திணிக்க வேண்டியதில்லை என்றும்தான் நான் வாதிட முயல்கிறேன். பிடெல் அமெரிக்காவை எதிர்க்கிறார் என்பதற்காக மட்டுமே நாம் இங்கு எதிர்க்கத் தேவையில்லை, பிடெல் எதிர்ப்பது தனது தேசிய நலன்களிலிருந்தே அன்றி உலகளாவிய நன்மைக்காகவல்ல என்ற உண்மையை உணர்ந்து நாம் நமது செயற்பாடுகளை வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்றே வாதிடுகிறேன். நமது சூழலில் அவ்வாறான தேவை இருக்குமாயின் அது குறித்து நமது சூழலுக்கு ஏற்ப நடவடிக்கைளை எடுக்கலாம். இப்படியொரு பார்வைதான் நமது தமிழ்ச் சூழலுக்கு தேவை என்றே குறிப்பிடுகிறேன். ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அதிர்ச்சியடைந்த இந்திய மாவோசிஸ்ட் அமைப்பு அந்த தோல்வியில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற அர்த்தத்தில் இருபது பக்க அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றது. என்னளவில் சொல்வேன் புலிகளின் தோல்வியில் இருந்து கற்றுக் கொள்வதற்கு முன்னர் அவர்கள் தங்களை மாவோசிஸ்ட் என்று அழைக்கும் நடைமுறையை மாற்றி இந்திய சூழலுக்கு அமைவாக பிறிதொரு பெயரில் இயங்குவது அவசரமானது. இந்தியாவை பலவீனப்படுத்துவதை குறியாகக் கொண்டியங்கும் ஒரு நாட்டின் தலைவரான மாவோவின் சிந்தனைகளின் நீட்சியாக தம்மை அப்பட்டமாக அடையாளப்படுத்திக் கொள்வதானது ஒருபோதுமே அவர்களுக்கு இந்திய மத்தியதர வர்க்கத்தின் மத்தியில் ஆதரவை பெற்றுக் கொடுக்கப் போவதில்லை. மாவோவிடமிருந்து கற்றுக் கொள்ளலாம் ஆனால் இந்தியச் சூழலில் மாவோ ஒரு போதும் தலைவராக முடியாது. இவ்வாறான பார்வைகளை உள்ளடக்கிவாறான புதிய சிந்தனைகளே இன்று நமக்கு தேவை என நான் கருதுகிறேன்.

இங்கு பிடெல் மற்றும் பல லத்தீனமெரிக்க அரசிலாளர்களுக்கு, தமிழர் அரசியல் பற்றி தெரியாது, அது குறித்து நாம் அவர்களது கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை என்றவாறான அர்த்தமற்ற உரையாடல்கள் பயனற்றது நன்பர்களே! ஒரு புரட்சிகர அரசு என்று தன்னை நிறுவிக் கொள்ள முயலும் அமைப்பு அல்லது நாடு தான் எடுக்கும் முடிவு தனது புரட்சிகர அரசியலின் தார்மீக நியாயத்திற்கு ஏற்புடையதுதானா என்பதை பரிசீலித்தே முடிவுகளை எடுக்க வேண்டும். கியூபா அவ்வாறு நடந்து கொள்ளவில்லை, அது தனது அமெரிக்க எதிர்ப்பு என்ற தன்னல அரசியலில் கவனம் கொண்டிருந்ததேயன்றி ஒட்டுமொத்த மானுட நீதி தழுவிச் சிந்திக்கவில்லை. சில தசாப்தங்களாக நமக்கு ஆதர்~மாக இருந்து கியூபா ஏன் அவ்வாறு சிந்திக்கவில்லை என்றால் இன்றைய உலக அரசியல் சூழலில் அப்படியொன்று இல்லை என்பதால்தான். ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் இருக்கும் வரை மார்க்சியம், புரட்சிகர அரசியல் செயற்பாடுகள் குறித்த உரையாடல்களும் இருக்கவே செய்யும் ஆனால் அந்த புரட்சிகர அரசியல் செயற்பாடுகளுக்கு எல்லைகள் தாண்டிய பெறுமதி இருக்கப்போவதில்லை என்பதே எனது வாதம்.


விவாதங்கள் தொடரட்டும்…

18,ஓகஸ்ட் - 2009 - http://www.keetru.com/

யார் படித்தவர்கள் ? அறிவும் வகுப்பறை கெட்டித்தனமும்

யார் படித்தவன்? என்பது இன்று புலமைத்துவ சூழலில் ஒரு விவாதமாகவே மாறியிருக்கின்றது. இவ்விவாதங்களை முன்வைத்து வருபவர்கள், இதுவரைக்கும் படித்தவர்கள் என்பதற்கு சொன்ன வரையறைகளையெல்லாம் ஒரு ஓரமாக வைத்துவிட்டு, படிப்பு என்பதன் சமூக பெறுமதி என்ன என்பதிலிருந்தே தமது உரையாடல்களை தொடங்குகின்றனர். உண்மையில் இது மிகவும் ஆரோக்கியமான ஒன்று. சமூதாய நிலையில் படித்தவர்கள் (கல்விமான்) என்ற சொல்லை இது கேள்விக்குள்ளாக்குகின்றது. கடைக்கோடி நிலையில் இருக்கும் ஒரு மணிதனுக்கும் சமூக பெறுமதி உண்டு என்பதை உணர்த்தும் வாதமிது.



நான் இது குறித்து சிந்தித்துக் கொண்டிருந்த போது எதேச்சையாக ஒருவரை சந்தித்தேன் இது நடந்தது இரு வருடங்களுக்கு முன்னர், அது ஒரு எதேச்சையான சந்திப்புத்தான். அவரது பெயர் இராமகிஸ்ணா. அவர் திருகோணமலை இந்துக் கல்லூரியில் 1949இற்கு பிற்பட்ட சில வருடங்கள் ஆசிரியராக பணிபுரிந்திருக்கிறார். பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய அவர், அங்கு தத்துவ துறைக்கு (னுநியசவஅநவெ ழக Phடைழளழிhல) தலைவராகவும் இருந்திருக்கிறார். ஈழத்தின் இலக்கிய மற்றும் கருத்தியல் சூழலில் எனக்கு நல்ல பரிச்சயமும் தொடர்புகளும் இருந்தபோதும் எங்குமே அவ்வாறானதொரு நபர் பற்றி குறிப்புக்களை நான் பார்த்ததில்லை. அதிலிருந்தே ஈழத்தின் புலமைத்துவ சூழலில் அவர் காத்திரமான தாக்கம் எதனையும் நிகழ்த்தக் கூடிய ஒருவராக இருந்திருக்கவில்லை என்பது தெளிவானது. ஏனென்றால் அவர் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த காலத்தில்தான் அங்கு கைலாசபதி, சிவத்தம்மி போன்றவர்கள் தமது புலமைத்துவ பணிகளை தமிழகம் வரை விஸ்தரித்துக் கொண்டிருந்தனர். 1983களுக்கு பின்னர் தான் இந்த நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகச் குறிப்பிட்ட அவர், தற்போது கதிர்காமத்திற்கு போவதற்காக தனது மனைவியுடன் வந்திருப்பதாகவும் கூறினார். முன்னர் மார்க்சிய சிந்தனைகளில் ஈடுபாடு கொண்டிருந்ததாகவும் இப்பொழுது அதில் போதாமை இருப்பதை உணர்வதாகவும் குறிப்பிட்டார். இவைகள் எனக்கு சுவார்சயமானவைகளாக இருக்கவில்லை ஆனால் கல்வி பற்றி அவர் குறிப்பிட்ட ஒருவிடயத்தில் நான் அக்கறை எடுத்துக் கொண்டேன். அவரது கருத்து ஏலவே என்னிடம் இருந்த கல்வி பற்றிய கருத்துடன் ஒத்துப்போனது. அவரது அபிப்பிராயம் கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போன்று இருந்தாலும் அது பெறுமதியுடைய ஒன்றாகத்தான் இருந்தது.

“நாங்கள் ஒரு காலத்தில் யாரையெல்லாம் படித்தவர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தமோ அவர்கள் எல்லோரும் இந்தநாட்டைவிட்டு ஓடிவிட்டார்கள். யாரை நாங்கள் படிக்காதவர்கள், மடையர்கள், என்றெல்லாம் சொன்னோமோ அவர்கள்தான் இன்று இந்த நிலத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணம் இந்தளவிற்கு சிதறிப்போனதற்கு எங்களிடம் இருந்த கல்விச் செருக்கும் ஒரு காரணம். எங்களுடைய கல்வி எங்களுக்கானதாக இல்லை வேறு எவருக்கோ உரியதாக இருக்கின்றது. யாருக்காகவோ எமது மாணவர்களை தயார் செய்து கொடுக்கும் வேலையைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். கல்வி என்பது என்ன? அவரவர் வேலைகளைச் செய்துவிட்டு ஓய்வு நேரத்தில் நல்ல அறிவான நூல்களை படித்து அறிவை வளர்த்துக் கொள்வதுதான்.”

நானும் திருகோணமலை இந்துக் கல்லூரியில் படித்த ஒருவன்தான். நான் ஒரு பின்வாங்கு மாணவன். அது என்ன பின்வாங்கு மாணவன்? ஆசிரியர்களால் வகுப்பறையில் எவரொல்லாம் கருத்தில் எடுக்கப்படுவதில்லையோ அவர்கள்தான் பின்வாங்கு மானவர்கள் சாதாரணமாக பாடசாலையை தாண்டி வந்த ஒவ்வொருவருக்கும் இது நன்கு தெரியும். எனது கிராமிய அனுபவத்தில் அப்படியான மானவர்களை எருமைமாடு மேய்க்கச் சொல்லுவதை நான் கேட்டிருக்கிறேன். கிராமத்தில் நான் அப்படியொன்றும் மோசமான வகுப்பறை மானவனாக இருக்கவில்லை. கொஞ்சம் கெட்டித்தனத்தை காட்டியிருக்கிறேன். நகரத்திற்கு அது பொருத்தமற்ற உதாரணமாக இருப்பதாலோ என்னவோ நகரத்து ஆசிரியர்கள் அப்படிப் பேசி நான் கேட்கவில்லை. நகரத்தில் எருமை மாடுகள் மேய்க்கக் கூடியளவிற்கு விசாலமான இடவசதிகளும் இல்லை. இறுதியில் அப்படியான மாணவர்களும் ஆசிரியப் பெருமக்களின் விருப்பம் போலவே எருமைகளோடு எருமைகளாகிவிடுவார்கள்;. உண்மையில் ஒரு ஆசிரியனின் பணி என்பது அவ்வாறான மாணவர்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பதுதான். துரதிஸ்டவசமாக எனது பாடசாலை காலத்தில் அவ்வாறான எந்தவொரு ஆசிரியரையும் நான் கானவில்லை.

வகுப்பில் கெட்டித்தனமானவர்களை கொண்டாடுவதுதான் ஒரு பாடசாலையின் கடமை என்றதொரு சூழல் இன்று உருவாகிவிட்டது. அப்படித்தான் நான் படித்த காலத்திலும் சிலரை ஆசரியர்கள் தலையில் தூக்கிக் கொண்டாடுவார்கள். அப்போது பாடசாலை மட்டத்தில் (பாடசாலையில் மட்டும் என்பதை குறித்துக் கொள்ளுங்கள்) என்னைப் போன்ற மக்குகள் அவர்களையெல்லாம் மலைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போதெல்லாம் நான் எனக்குள் சொல்லி மகிழ்ந்து கொள்வேன். இவர்கள்தான் நாளைய அறிஞர்கள், விஞ்ஞானிகள் இவர்கள்தான் திருகோணமலையின் பேர் சொல்லப்போகின்றவர்கள் என்றெல்லாம். பிற்காலத்தில், நான் சமூக நீரோட்டதிற்குள் இறங்கிய போதுதான் தெரிந்தது, அந்த நாய்களில் ஒருவருக்குமே சமூகம் என்றாலே என்னவென்றே தெரியாதென்று. நான் அறிந்து எனது பாடசாலைக் காலத்தில் கெட்டித்தனமானவர்களாக இருந்த ஒருவரைக் கூட சமூதாய நீரோட்டத்திற்குள் கானவில்லை. ஒரு வேளை அதுதான் வகுப்பறை கெட்டித்தனத்தின் அடிப்படையாக இருக்கவும் கூடும். இன்று நாங்கள் போற்றும் கல்வியானது, நமது இளைய தலைமுறைக்கு சமூகம் குறித்து கற்பிக்கும் பாடமென்ன? கல்வியின் அடிப்படை சமூகத்தை முன்னோக்கி நகர்த்தும் சக்தியாக இருக்க வேண்டும். உண்மையில் கல்வி என்பது ஒரு சமூக ஆயுதம். ஆயுதத்தை சமூக நன்மைக்கும் பயன்படுத்த முடியும் சமூக அழிவுக்கும் பயன்படுத்த முடியும். எங்களது கல்வி எதற்கு பயன்பட்டது என்பதுதான் இங்கு துருத்திக் கொண்டு நிற்கும் கேள்வி. நாங்கள் வேறு கல்விக்கு கடவுள் வைத்திருப்பவர்கள்;.

பாடசாலை என்பது வெறுமனே வகுப்பறை கெட்டித்தனத்தை போற்றும் ஒரு இடமாக இன்று சுருங்கிவிட்டது. உண்மையில் வகுப்பறை கெட்டித்தனம் படைப்பாற்றல் அற்ற ஒன்று. அதனால் ஒரு மலட்டு சமூகத்தை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். ஆசிய சமூகத்தவர்களின் கல்வி அறிவைப்பற்றி ஒரு அமெரிக்கர் சுவையாக கூறிய விடயமொன்றை படித்தேன். அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். வகுப்பறையில் ஒரு ஆசிய மாணவணோடு ஒப்பிட்டால் மேற்கு மாணவன் இரண்டாவதுதான். அதிலும் மனனம் செய்து ஒப்புவிப்பதில் இந்த ஆசிய மாணவனை வெல்லவே முடியாது. எப்போதும் வகுப்பில் மேற்கு மாணவன் ஆசியனுடன் தோற்றுக் கொண்டுதான் இருப்பான். ஆனால் சிறிது காலத்திற்கு பின்னர் பார்த்தால் வகுப்பில் முதலாவதாக வந்த அந்த ஆசிய மாணவன், இரண்டாவதாக வந்து கொண்டிருந்த மேற்கு மாணவனிடம் உதவியாளனாக பணியாற்றிக் கொண்டிருப்பான். பிரச்சனை என்னவென்றால் ஆசிய மானவனிடம் பாடங்களில் கெட்டித்தனம் இருந்தளவிற்கு படைப்பாற்றல் இருப்பதில்லை. படைப்பாற்றல் அற்ற வகுப்பறை கெட்டித்தனங்கள்தான் எங்களைப் பொருத்தவரையில் பெரிய அறிவு, அப்படியானவன்தான் எங்களுக்கு பெரிய அறிவாளி. கல்விக்கு கடவுள் வைத்திருக்கும் நம்மிடமோ இப்பொழுது சந்திக்கு சந்தி அறிவாளிகள் ஏராளம். நமது பாடசாலைகளின் சாதனைகளாக சொல்லப்படுபவைகளை கேட்கும் போது கொடுப்புக்கள் சிரித்துக் கொள்வதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும்.

இதில் மிகவும் வருத்தத்திற்குரியது என்னவென்றால் இன்று எல்லாம் இழந்து நடு வீதியில்; நிற்கும் போதும் நமது செருக்கு குறைந்தபாடில்லை என்பதுதான்.