எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கின்றது. அது 1990 ஆம் ஆண்டு காலப்பகுதி, மாதம் சரியாக ஞாபகம் இல்லை. விடுதலைப்புலிகளின் இரண்டாம்மட்ட தலைவர் மாத்தையா என அழைக்கப்பட்ட மகேந்திரன் எனது சொந்த ஊரான தம்பலகாமத்திற்கு வருகிறார். மக்கள், தம்பலகாமத்தின் பிரதான வாயில் பகுதியான புதுக்குடியிருப்பிலிருந்து வீடுகள் தோறும் நிறைகுடங்கள் சகிதம் பூக்கள் தூவி அவரை வரவேற்றனர். எனது வீட்டு வாயிலில் வைத்து அவருக்கு நான் சந்தனப் பொட்டிட்டது எனக்கு இப்போதும் நன்றாக ஞாபகம் இருக்கின்றது. இந்த சம்பவம் இடம்பெற்ற போது எனக்கு வயது 14. அப்போது தமிழ்த் தேசியம் என்ற சொல்லைக் கூட நான் கேள்வியுற்றிருக்கவில்லை. விடுதலை போராட்டம,; அரசியல் இது பற்றியெல்லாம் எதுவும் தெரிந்திருக்கக் கூடிய சூழலும் எனக்கு கிடைக்கவில்லை.
ஆனால் தமிழ்த் தேசிய அரசியல் குறித்தும் விடுதலைப் போராட்ட வரலாறு குறித்தும் நான் அறிந்து கொள்ள முற்பட்ட பிற்காலத்தில் அன்று சந்தனப் பொட்டிட்ட மாத்தையா எனக்கு துரோகியாகவே அறிமுகம் செய்யப்பட்டார். அன்றைய அரசியல் பதிவுகள் அவரை அவ்வாறுதான் அறிமுகம் செய்தன. இது குறித்து இப்போது நினைத்துப் பார்க்கும் போது ஒரு வகையில் விசித்திரங்கள் நிறைந்த பாதையில் பயணித்து வந்திருப்பதான உணர்வே கிடைக்கின்றது. அவர் ஏன் துரோகியாகிப் போனார் என்பதற்கான காரணங்களை புலிகளின் மேற்பார்வையில் வெளியிடப்பட்ட நூல்களில் கானலாம். இது பற்றி அடேல் பாலசிங்கம் தனது ‘சுதந்திர வேட்கையிலும்;’ சொல்லியிருக்கின்றார். இது மாத்தையா குறித்து பேச முயலும் ஒரு கட்டுரையல்ல. துரோகி என்ற சொல் எனக்கு முதல் முதலாக பரீட்சயமான சம்பவம் ஒன்றை நினைவு கொள்ளும் நோக்கிலேயே இந்த விடயத்தை எடுத்தாண்டுள்ளேன்.
நான் நினைக்கின்றேன் நமது தமிழ்த் தேசிய அரசியலில் அதிகம் பிரபலமான சொல் ‘துரோகி’ என்பதாகத்தான் இருக்க முடியும். அந்த அளவிற்கு விடுதலை என்ற சொல் கூட பரவலடைந்திருக்கவில்லை. ஆரம்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி மேடைகளில் அமிர்தலிங்கம் போன்றவர்களால் தமது எதிரணியினரை இழிவுபடுத்தும் நோக்கில் கையாளப்பட்ட ‘துரோகி’ பின்னர் ஆயுதவழியில் விடுதலை தேடிப் புறப்பட்ட இயக்கங்களால் தத்தெடுக்கப்பட்டது. இறுதியில் இயக்கவழி அரசியலில், தமது செயற்பாடுகளை விமர்சிப்போர், மாற்று நிலைப்பாடுகளைச் சொல்லுவோர், ஆக்க பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போர் என அனைத்து தரப்பினரையும் இந்தச் சொல் துரத்தியடித்தது. சில நேரங்களில் அவர்கள் குருதியில் நனைந்து தன்னை நிறுவிக் கொண்டது. இன்று வரை இந்த சொல் மாற்று கருத்துக்களை சொல்வோரை அச்சுறுத்தி அடிபணிய வைக்கும் ஆயுதமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அதிகம் விடுதலைப்புலிகள் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் ஏனையோர் அனைவரும் தூய்மையானவர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ள முடியாது. புலிகள் தமக்கு எதிரணியில் இருப்போரை (மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டோர் குறித்து இங்கு நான் குறிப்பிடவில்லை) மக்கள் மத்தியிலிருந்து அன்னியப்படுத்துவதற்கு எவ்வாறு ‘துரோகி’ என்ற சொல்லை ஒரு உக்தியாகக் கைக்கொண்டு வந்தனரோ அவ்வாறே புலிகளுக்கு எதிரான அணியில் இருந்தோரும் தம்மை விமர்சிப்போரை, நிராகரிப்போரை தூற்றுவதற்கும் பழிவாங்குவதற்கும் அதே ‘துரோகி’ பட்டத்தையே பயன்படுத்திக் கொண்டனர். எங்குமே கருத்து வெளிப்பாட்டுக்கான நாகரிகம் பின்பற்றப்பட்டிருக்கவில்லை. இத்தனை அழிவுகளுக்கு பின்னரும் கூட இதில் பெரியளவு முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதே மிகவும் துரதிஸ்டவசமானது. இதற்கு சிறந்த உதாரணம் எனது இந்தியா குறித்த கட்டுரை தொடர்பில் எனக்கு றோ பட்டம் சூட்டப்பட்டமையாகும். ஒரு கருத்து நிலைப்பாட்டை கருத்தாக எடுத்துக் கொண்டு எதிர்வினையாற்றக் கூடிய சூழல் நம்மத்தியில் இன்னும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியளவு வளர்ச்சியடையவில்லை. இந்த போக்கில் மட்டும் இடதுசாரி வலதுசாரி என்றெல்லாம் நமக்குள் பேதங்கள் இல்லை. நமக்கு முரண்பாடான கருத்துக்களை கூறுவோரை என்ன வழியைக் கையாண்டாவது உரையாடல் அரங்கிலிருந்து அகற்றிவிட வேண்டுமென்பதே நமது முதன்மை நோக்காக இருக்கின்றது. இது ஒரு எதேச்சாதிகார வழிமுறை இதனை புலிகள் செய்தால் பாசிசம் மற்றவர்கள் செய்தால் புரட்சி என்று அர்த்தம் கற்பிப்பது எவ்வாறு சரியாகும் என்று எனக்கு விளங்கவில்லை.
இதில் பிறிதொரு சுவார்ஷயமான விடயம் இருக்கின்றது. இது ‘துரோகி’ என்று ஒருவரை குறிப்பிடாமலேயே அவரை துரோகியாக்கும் கலை. இந்த கலையை கற்றுக் கொள்ள வேண்டுமாயின் அதனை நமது தமிழ் இடதுசாரிகளிடமிருந்தே (இதிலும் விதிவிலக்குகள் உண்டு) கற்றுக் கொள்ள முடியும். முன்னைய ‘துரோகி’ பட்டம் பேராட்ட சூழலில் மாற்று நிலைப்பாடுகளில் இயங்குவோரை இலக்கு வைத்தது ஆனால் நமது இடதுசாரிகளின் அனுகுமுறையோ வித்தியாசமானது. தாம் மார்க்சியம் என்று கருதும் ஒரு நிலைப்பாட்டுக்கு எதிராக கருத்துக்களை முன்வைப்போரை தனிமைப்படுத்துவதற்கும், மனச் சோர்விற்கு உள்ளாக்கி ஒரு வகையான உளவியல் நெருக்கடிக்குள் தள்ளிவிடும் குரூர எண்ணம் கொண்ட அணுகுமுறை இவர்களுடையது. இங்கு துரோகி என்ற பட்டம் சூட்டலுக்குப் பதிலாக சி.ஜ.ஏ, றோ போன்ற பட்டங்கள் சூட்டப்படும். சொற்களில் மட்டுமே வித்தியாசம்.
2
இன்று ‘துரோகி’ என்பது நமது சூழலில் மிகவும் அருவருப்பூட்டும் ஒரு சொல்லாக மாற்றியிருக்கின்றது. இதனைப் பயன்படுத்தியவர்களையே அது இன்று துரத்துவதுதான் இதிலுள்ள பெரிய சோகம். சமீபத்தில் எனது நன்பர் ஒருவரிடம் இது பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது அவர் சொன்னார். ‘துரோகி’ இது ஒரு மலினப்பட்ட சொல். இது பற்றி பேசுவதே ஒரு வகையில் அவமானகரமானது என்றார். இதில் ஒரு வேடிக்கையான விடயம் என்னவென்றால் மே.18 இற்கு முன்னர் எவரெல்லாம் பெரும் மனிதர்களாகவும், வீரர்களாகவும் போற்றப்பட்டார்களோ அவர்கள் எல்லாம் இன்று துரோகிகள் ஆக்கப்பட்டிருப்பதுதான். சில வேளை நாளை சரனடைந்து முகாம்களில் வாழும் போராளிகள் பொது மன்னிப்பின் பேரில் வெளியில் வந்தால், பொது மன்னிப்புப் பெற்ற அனைவருமே துரோகி ஆக்கப்பட்டாலும் கூட ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இந்த இடத்தில்தான் ‘துரோகி’ என்ற சொல் கொண்டு கட்டமைக்கப்படும் அரசியல் ஒரு கேள்வியை உந்தித் தள்ளுகின்றது. யார் யாருக்கு துரோகி? இதனை தீர்மானிப்பது எதிர்நிலைப்பட்ட அரசியலா அல்லது மக்களின் நலனா?
மே18 இற்கு முற்பட்ட புலிகளின் தலைமையிலான தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் ‘துரோகி’ என்பதன் அர்த்தம் மிகவும் எளிமையானது. எவர் புலிகளின் தலைமைக்கு எதிராக செயற்பட எண்ணுகின்றாரோ, எவர் புலிகளின் தலைமைக்கு எதிராக சிந்திக்கின்றாரோ அவர் துரோகி. ஏனெனில் அவர் தலைமைக்கு விசுவாசமற்று இருக்கின்றார் என்ற ஒற்றைப்பார்வையே இங்கு மேலாதிக்க வாதமாக இருந்தது. புலிகளின் காலத்தில் ‘துரோகி’ என்பதன் அரசியல் பரிமாணம் இவ்வாறுதான் அமைந்திருந்தது. இந்தச் சூழலில் புலிகளை கோட்பாட்டு ரீதியாக விமர்சிப்பதாகக் கூறிக் கொண்டோரும் அந்தச் சொல்லையே பல்வேறு சந்தர்ப்பங்களில் தம்மை நிலைநிறுத்த பயன்படுத்திக் கொண்டனர்.
இன்று நிலைமை மேலும் மோசமடைந்திருக்கின்றது. மே18 இற்கு பிற்பட்ட காலத்தை ‘துரோகிகள்’ வசைபாடும் படலம் என்று சொன்னாலும் அது மிகையில்லை, அந்தளவிற்கு துரோகிகள் மலிந்து விட்டார்கள். முன்னராவது ஒரு அளவு கோல் இருந்தது. புலிகளின் தலைமைக்கு அவர்கள் விசுவாசமற்றவர்கள் ஆகவே அவர்கள் துரோகிகள். ஆனால் இப்போது என்ன அளவு கோல் கொண்டு இந்த ‘துரோகி’ பட்டங்கள் சூட்டப்படுகின்றன. இதனை தீர்மானிப்பது யார்? ஒரு வகையில் கோட்டாம்பாக்க தமிழ் சினிமா பார்ப்பது போன்றிருக்கின்றது எங்கள் ஈழத் தமிழர் தேசிய அரசியல்.
ஒருவர் துரோகியாக்கப்படும் போது அவர் யாருக்கு துரோகியாக இருக்கின்றார் என்பதுதான் முதன்மையான கேள்வியாக இருக்க வேண்டும். அவர் குறிப்பிட்ட ஒரு சிலரின் அரசியலுக்கு அல்லது அவர்களின் விருப்பங்களுக்கு துரோகியாக இருக்கின்றரா அல்லது தனது மக்களுக்கு துரோகியாக இருக்கின்றாரா? எனவே அடுத்தவருக்கு துரோகி பட்டம் சூட்ட விருப்புவோர் இந்த கேள்வியில் நின்று சிந்திப்பது அவசியம். இல்லாவிட்டால் நாளை அனைவரும் துரோகியாக்கப்படலாம். இவ்வாறான வசை புராணங்களில் நேரத்தை விரையம் செய்வோர், இறுதியில் அது உங்களையும் விட்டுவைக்கப் போவதில்லை என்பதை நினைவில் நிறுத்திக் கொள்வது நல்லது. இன்னொன்றையும் மனங்கொள்வது அவசியம், நேற்று கொண்டாடப்பட்டோர் இன்று துரோகியாகிருப்பது போல் இன்ற தூற்றப்படுவோரை வரலாறு பெரும் மனிதர்களாக, மக்களின் நலனில் நின்று சிந்தித்தவர்களாக பதிவு செய்யலாம். எல்லாமே காலநிர்ணத்திலேயே தங்கியிருக்கின்றது.
கியூபப் தேசிய புரட்சியாளர் ஹெலே மார்த்தி திறமையாளர்கள் பற்றி இவ்வாறு கூறுவார். ‘கையறு நிலையில் உள்ளவர்களுக்கு உதவுவதுதான் திறமையுள்ளவர்களின் கடமையாகும், இதுதான் மனிதர்களை அளவிடும் கருவி’ தமிழர் தேசமெங்கும் கையறு நிலையில் இருக்கும் மக்களுக்கு தோள்கொடுப்பதும், அவர்களது நலன்கள் குறித்து சிந்திப்பதும் துரோகமென்றால், தமிழர் தேசத்தில் துரோகியாக இருப்பது குறித்து நாம் பெருமைப்படலாம்.
யதீந்திரா
‘’’
No comments:
Post a Comment